வாணியம்பாடி அருகே சப்-இன்ஸ்பெக்டருடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபர்
வாணியம்பாடி அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள காவலூரை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை காவலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கல்லரைபட்டி அருகே உள்ள பிருந்தாவன் பள்ளி பகுதியில், ஆலங்காயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் சப்-இன்ஸ்பெக்டர் கையிலிருந்த செல்போனை தட்டி விட்டு வேகமாக ஆலங்காயம் நோக்கி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்று ஆலங்காயத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.
கட்டிப்புரண்டு சண்டை
பின்னர் மணிகண்டனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல போலீசார் முற்பட்டபோது சப்- இன்ஸ்பெக்டர் உமாபதிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நடு ரோட்டில் இருவரும் கீழே விழுந்து கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்..
பின்னர் மணிகண்டனை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் சம்பவம்
சப்- இன்ஸ்பெக்டரும், வாகன ஓட்டியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு, ரோட்டில் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரை சிலர் தகராறு செய்து தாக்குவது தொடர்ந்து வருகிறது. கடந்தவாரம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் குணா என்பவரை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நடுரோட்டில் தாக்கி கட்டி புரண்டு சண்டையிட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story