வேலூரில் வாலிபரை கொலை செய்து உடல் புதைப்பு


வேலூரில்  வாலிபரை கொலை செய்து உடல் புதைப்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 11:57 PM IST (Updated: 9 Nov 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்து உடலை புதைத்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்து உடலை புதைத்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் மாயம்

வேலூர் பெருமுகை மேலாண்டை தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் பாலமுருகன் (வயது 20). மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாருக்கு பாலமுருகனின் நண்பர்களான தோட்டப்பாளையத்தை சேர்ந்த கரியன் என்ற ஜெகதீஸ்வரன் (19), 17 மற்றும் 18 வயதுடைய 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாலமுருகனை 3 பேரும் சேர்ந்து கொலை செய்து பின்னர் புதைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொன்று புதைப்பு

கடந்த 28-ந் தேதி பாலமுருகன் மற்றும் ஜெகதீஸ்வரன், 17, 18 வயதுடைய சிறுவர்கள் ஆகியோர் சேர்ந்து தோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டல் பின்புறம் உள்ள காலி இடத்தில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. பாலமுருகனை 3 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கினர்.

படுகாயமடைந்த பாலமுருகன் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை மேலும் தாக்கி கொலை செய்தனர். பின்னர் பழையபாயில் அவரது உடலை சுற்றி சம்பவ இடத்திலேயே குழிதோண்டி புதைத்தனர். பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து சென்று விட்டனர்.

காதல் விவகாரம்

பாலமுருகன் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டதாக கருதுகிறோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். பாலமுருகன் மீதும் ஒரு கொலை வழக்கு உள்ளது. அந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 பேர் கைது

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, பாலமுருகன் மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மேலும் நேற்று பாலமுருகன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டறிந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவரின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story