தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 10 Nov 2021 12:03 AM IST (Updated: 10 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி 
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கண்ணன், பள்ளப்பட்டி, கரூர். 

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு 
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அனைத்து இடங்களிலும் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன.  குறிப்பாக புது தெரு குரங்குகளின்  நிரந்தர இருப்பிடமாக உள்ளது. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்படும் தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுவிடுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது குரங்குகள் அமர்ந்து கொள்வதுடன், பொதுமக்களை கடிக்கவருவதுபோல் அச்சுறுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நிஜாம்தீன், அன்னவாசல், புதுக்கோட்டை. 

உடைந்த பாலத்தால் வாகன ஓட்டிகள் அவதி 
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பொன்மலையடிவாரம் பாபா கோவில் எதிரில் ரேஷன் கடை அருகில் வாய்க்கால் பாலம் உடைந்து பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த தெரு வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள் எதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த ஆபத்தான பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது.  உடைந்த பாலத்தின் அருகிலேயே ரேஷன் கடை உள்ளது. அதற்கு பொருட்கள் எடுத்துவரும் லாரிகள் வந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலையடிவாரம், திருச்சி. 

மக்காச்சோள பயிரை நாசம் செய்யும் குரங்குகள் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்  வட்டம் , சாத்தனூர் கிராமத்தில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மக்காச்சோளம் பூ மற்றும் கருது வரும் நிலையிலும் ,கருது வந்த பிறகும் மக்காச்சோளப்பயிரை நூற்றுக்கணக்கான குரங்குகள் பட்டாளமாக வந்து ஓடித்து உண்டு பெருமளவில் நாசம் செய்கின்றன. இதனால் பெருமளவில் விவசாயத்தில் பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த சேதம் வருடா வருடம் தொடர்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் குரங்குகளைப்பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
திலகர், சாத்தனூர், பெரம்பலூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, விராலிமலை ஒன்றியம் தென்னம்பிள்ளை மாத்தூரில் உள்ள  வடக்குத்தெருவில் சுமார் 100 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைத்து 3 மாதங்கள்தான் ஆகிறது. சரியாக கழிவுநீர் வாய்க்கால் அமைத்து அதனை முடிவுக்கு விடாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தென்னம்பிள்ளை மாத்தூர், புதுக்கோட்டை. 

நாய்களால் பொதுமக்கள் அச்சம் 
திருச்சி கே.கே.நகர், அய்யப்பாநகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லும் பெண்களும், பள்ளி மாணவ- மாணவிகளும் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இவை சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கே.கே.நகர், திருச்சி. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
அரியலூர் மாவட்டம், அரண்மனைக்குறிச்சி, ராஜீவ் நகர் 2-வது தெருவில் முறையான வடிகால் வசதி இன்றி மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அரண்மனைக்குறிச்சி, அரியலூர். 

சேறும், சகதியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  வட்டம், கோங்குடி ஊராட்சி, கோங்குடியில் உள்ள சாலை சேறும், சகதியாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் நடந்து செல்லும் முதியவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோங்குடி, புதுக்கோட்டை. 
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் இருக்கும் பிள்ளையார்கோவில் தெருவின் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் உள்பட பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விளாங்குடி, அரியலூர்.  

பயனற்ற நீர்த்தேக்க தொட்டிகள்
திருச்சி மாவட்டம்,  மணப்பாறை, தொப்பம்பட்டி ஊராட்சி, ஆளிப்பட்டியில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதுடன் ஆங்காங்கே மொத்தம் 5 இடங்களில் தனித்தனியாக நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது ஒரு  நீர்த்தேக்க தொட்டி மட்டும் பயன்பாட்டில் உள்ளது. மற்ற 4 நீர்த்தேக்க தொட்டிகளும் பயனற்று பழுதடைந்து உள்ளது. இதனால் தெருக்குழாயில் குடிநீர் வராத பட்சத்தில் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆளிப்பட்டி, திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி ஏர்போர்ட் 37-வது வார்டு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதியில் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஏர்போர்ட், திருச்சி. 

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் 
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் தா.பேட்டை சாலை அண்ணா நகர்  பகுதியில் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது, ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைநீரில் விஷ ஜந்துக்கள் அடித்துவரப்பட்டு வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், அண்ணாநகர், திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம் குழுமணிரோடு மேலபாண்ட மங்கலம், 60-வது வார்டு சந்தோஷ் எஸ்டேட்  குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளதால் பாம்புகளும், விஷ பூச்சிகளும் நிறைய அலைகின்றன. இதனால் இங்குள்ளோர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மெர்சி, சந்தோஷ் எஸ்டேட், திருச்சி.

பயன்படுத்த முடியாத கழிப்பறை 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர்,65-வது வார்டு  நேதாஜி நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்தும், பாழடைந்தும் காணப்படுகிறது. மேலும் இவற்றின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நேதாஜிநகர், திருச்சி. 

சாலையில் திரியும் மாடுகள், குதிரைகள்
திருச்சி உறையூரில் இருந்து குழுமணி செல்லும் சாலையில் ஏராளமான மாடுகள் மற்றும் குதிரைகள் இரவு, பகலாக சுற்றி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள்,உறையூர், திருச்சி. 


Next Story