சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்


சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 10 Nov 2021 12:24 AM IST (Updated: 10 Nov 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

சுப்பன் ஆசாரி களம் பகுதியில் சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

குளித்தலை,
சாலை மறியல்
குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சிக்குட்பட்டது விஸ்வநாதபுரம் என்கிற சுப்பன் ஆசாரிகளம். இப்பகுதி மக்கள் நேற்று பணிக்கம்பட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை மறியல் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- 
நடுப்பட்டி- பனிக்கம்பட்டி செல்லும் சாலையிலிருந்து சுப்பன் ஆசாரி களத்திற்கு செல்லும் பாதை மண் பாதையாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.
சேறும், சகதியுமான சாலை
மேலும், இந்த சாலை பட்டா நிலமாக இருப்பதால் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி முறையான சாலை மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்திதர வேண்டும் என மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சுப்பன் ஆசாரி களம் பகுதிக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாகவும், ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வருகிறோம். எனவே இப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை, மருதூர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் சிரமமின்றி இப்பாதையில் சென்றுவர மண் கொட்டி சரி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இருப்பினும் தங்களது பகுதிக்கு நிரந்தர சாலை வசதியை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி தற்காலிகமாக தங்களது போராட்டத்தை கைவிடுவதாக கூறி அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story