கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கரூர்,
சூரசம்ஹார நிகழ்ச்சி
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளினார். அவருக்கு பல்வேறு வகையான பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சூரபத்மன் என்கிற அசுரன் தன்னை போரில் யாரும் வெல்ல முடியாது என்கிற மனோபாவத்தில் கையில் கேடயம், வாள் உள்ளிட்டவற்றை ஏந்தி எழுந்தருளினார். அப்போது போர்க்களத்தில் மோதிக்கொள்வது போல் முருகபெருமான், சூரபத்மனின் பல்லக்குகள் அங்கும் இங்கும் தூக்கி செல்லப்பட்டன. முடிவில் தர்மமே வெல்லும் என்பதற்கேற்ப அசுரர்களிடமிருந்து மக்களை காப்பதற்காக தனது வேலால் சூரபத்மனின் தலையை முருகபெருமான் துண்டித்தார். அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்கிற கோஷங்களை பக்தர்கள் எழுப்பினர்.
திருக்கல்யாண உற்சவம்
சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி குறித்து பக்தர்களிடம் விளக்கி கூறப்பட்டது. மேலும், கோவிலின் 4 பிரகாரங்களில் பானுகோபன், கஜமுகன், சிங்கமுகன், தர்மகோபன் ஆகியோரை முருகன் வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
கடம்பவனேசுவரர் கோவில்
குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி முருகனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று பார்வதியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனைதொடர்ந்து போரிட வந்த பானுகோபனை முருகர் வதம் செய்தார். பின்னர் அடுத்தடுத்து போரிட வந்த கஜமுகன், சிங்கமுகன், தர்மகோபன் ஆகியோரையும் வதம் செய்தார். இறுதியாக போரிட வந்த சூரபத்மனை சுவாமி வதம் செய்தார். பின்னர் மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்து கொண்டார்.
கொட்டும் மழையில்...
குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலமான ரெத்தினகிரீசுவரர் கோவிலும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதேபோல் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள முருகன் கோவில்களில் கொட்டும் மழையிலும் சூரசம்ஹாரவிழா நடத்தப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சூரசம்ஹாரத்தில் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
உச்சி கால பூஜை
வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டியையொட்டி மூலவருக்கு புனித நீரால் நீராடப்பட்டு அதன் பின் பால், தயிர், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புகழிமலை முருகன் கோவிலில் பகல் 1 மணியளவில் உச்சி கால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கந்த சஷ்டி கவசம்
புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள முருகனுக்கு கந்தசஷ்டியைெயாட்டி பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், திருநீர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கந்தசஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், பாலசுப்பிரமணிய சுவாமியின் திருப்பாடல்களை தொடர்ந்து பாடினர். சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முடிவில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு முருகன் கோவில்களில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி புகழிமலை, பாலமலை, வெண்ணைமலை முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருப்பினும் கந்த சஷ்டியையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
Related Tags :
Next Story