முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பெரம்பலூர்:
கந்த சஷ்டி விழா
பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு பால், தயிர், பழ வகைகள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. கோவில் அர்ச்சகர் ரமேஷ், மயூரப் பிரியன் அய்யர் ஆகியோர் அபிஷேக, ஆராதனைகளை நடத்தினர்.
இதில் மேட்டுத்தெரு, பாரதிதாசன் நகர், முத்துநகர், காவேரி நகர், ராமுபிள்ளைகாலனி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி முக கவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலையில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.
பிரம்மபுரீஸ்வரர் கோவில்
அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நகர நகை வியாபாரிகள் சங்கம், நகர விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில் 44-வது ஆண்டு கந்த சஷ்டி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுப்ரமணியசுவாமி சன்னதியில் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது. அபிஷேகங்களை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்திார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அவற்றை கோவில் அர்ச்சகர் சிவசுப்ரமணிய குருக்கள் நடத்தினார். இதில் குரும்பலூர், பாளையம், ஈச்சம்பட்டி, கே.புதூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
சூரசம்காரம்- திருக்கல்யாணம்
ஆண்டுதோறும் கோவில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்கார நிகழ்ச்சி, திருக்கல்யாணம் ஆகியவற்றை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை தொடர்ந்து கூட்டம் கூடுவதை தவிர்க்கும்பொருட்டு, சூரசம்காரம், திருக்கல்யாணம் ஆகியவை நடத்தப்படவில்லை என்று கூறப்பட்டது.
தண்டாயுதபாணி கோவில்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள தண்டாயுதபாணி கோவிலில் முருகப்பெருமான் கையில் செங்கரும்பு ஏந்தி நிற்பதால், ‘செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர்’ என்ற சிறப்பு பெயர் உண்டு. நேற்று கந்த சஷ்டி விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சண்முகா யாகம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மூலிகைப் பொருட்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டது. மூலவர் தண்டாயுதபாணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, விபூதி, பழவகைகள் மற்றும் கலச தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம், சிறப்பு பூஜைகளோடு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பெரகம்பி, பொம்மனப்பாடி, சிறுவயலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story