பிட்காயின் விவகாரத்தில் தகவல்களை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்
பிட்காயின் விவகாரத்தில் தகவல்களை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு:
உறுப்பினர் சேர்க்கை
கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரசில் இணைந்தனர். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பணி தொடக்க நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. தற்போது உறுப்பினர்களாக உள்ளவா்களும் தங்களின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம். உறுப்பினராக ரூ.5 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்சியில் தீவிர உறுப்பினராக சேர 100 பேரை சேர்க்க வேண்டும். கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
பிட்காயின் விவகாரம்
நாட்டிற்கு காங்கிரஸ் கட்சி தவிர்க்க முடியாதது. காங்கிரசின் வரலாறே நாட்டின் வரலாறு. காங்கிரசின் கொள்கை-கோட்பாடுகளை நம்புகிறவர்கள் எங்கள் கட்சியில் வந்து சேரலாம். காங்கிரசில் இருந்து விலகி சென்றவர்கள், மீண்டும் கட்சிக்கு திரும்ப விரும்பினால் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் கடிதத்தை பரிசீலித்து முடிவு எடுக்க ஒரு குழு உள்ளது.
பிட் காயின் விவகாரத்தில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்த தகவல்களை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும். காங்கிரசார் அதில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். இதற்கு எங்களின் ஆட்சேபனை இல்லை. இந்த விஷயத்தில் நாங்களும் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியுள்ளோம். அதில் கிடைத்துள்ள தகவல்கள் உரிய நேரம் வரும்போது பகிரங்கப்படுத்துவோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story