நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்


நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்
x
தினத்தந்தி 10 Nov 2021 3:16 AM IST (Updated: 10 Nov 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார். மேலும் அவர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரு:

உதயநிதி ஸ்டாலின்

  நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கன்னட திரை உலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகமே இரங்கல் தெரிவித்தது. ஏராளமான தெலுங்கு, தமிழ் திரைப்பட நடிகர்கள் நேரில் வந்து புனித் ராஜ்குமாரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், பிரபு உள்ளிட்ட பலர் வந்து புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

  இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவரது மகனும், நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பெங்களூரு வந்து சதாசிவநகரில் உள்ள புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது நடிகர் சிவராஜ்குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அங்கிருந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

நெருங்கிய தொடர்பு

  பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘எங்கள் கட்சி தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நான் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவரது திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார், எனது தாத்தா கருணாநிதி மற்றும் எனது தந்தையுடன் பழகியவர். எங்கள் குடும்பத்திற்கும், ராஜ்குமார் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தி.மு.க. சார்பில் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

  உதயநிதி ஸ்டாலினுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் இருந்தார்.

Next Story