தொடர்மழையினால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஆலங்குளம், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ராஜபாளையம்
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்மழையினால் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ராஜபாளையம் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஆறாவது மைல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ராஜபாளையத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. சேதமடைந்த சாலையில் செல்ல முடியாமல் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி காட்சியளிக்கிறது. அதேபோல இந்த பகுதியிலும் மழைநீரில் அடித்து வரப்பட்ட குப்பைகளும் தேங்கி கிடக்கிறது.
இதனால் அந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் சுகாதாரமற்ற சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக 7 வீடுகள் இடிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை தாலுகாவை சேர்ந்த வல்லம் பட்டிகண்மாயில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழையினால் தற்போது 2½ அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் 5 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல் இருந்த விவசாயிகள் தற்போது தங்களது பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனர்.
அதேபோல வரத்து கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. பருத்தி, மக்காச்சோளம், தட்டாம் பயறு, பாசிப்பயறு, உள்ளிட்ட பயறு வகைகள் பயிரிடும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
மேலும் கண்மாய்க்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ், துணை தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் கண்மாயினை நேரில் பார்வையிட்டனர்.
காரியாபட்டி
திருச்சுழி அருகே கேத்த நாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. சென்னிலைக்குடி செல்லும் சாலையில் ஊருணி உள்ளது. இந்த ஊருணி நிரம்பிய பின்பு கேத்தநாயக்கன்பட்டி கண்மாய்க்கு வரத்துக் கால்வாய் மூலம் மழைநீர் வந்து சேரும். ஆனால் தற்போது வரத்து கால்வாய் தூர்வாரப்படாததால் இந்த கால்வாய் வழியாக வரும் தண்ணீர் கிராம பகுதியில் உள்ள மானாவாரி பயிரிடும் விவசாய நிலத்தில் தேங்கியுள்ளது. நிலத்தில் பருத்தி, சோளம் போன்ற பயிர்களில் நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேத்தநாயக்கன்பட்டி கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Related Tags :
Next Story