மகளிருக்கான இலவச பயண திட்டத்தில் 24,84,245 பேர் பயன் அடைந்துள்ளனர் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
மகளிருக்கான கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 24 லட்சத்து 84 ஆயிரத்து 245 பேர் பயன் அடைந்துள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், 5 முக்கிய அரசாணைகளை பிறப்பித்தார். அதில் பெண்கள் அனைவரும் சாதாரண பஸ்சில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை தொடங்கி வைத்து மகளிர் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அதில் பயனடையும் பயனாளிகளின் கருத்துகள் குறித்து களஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 23-10-2021 அன்று சென்னை மாநகராட்சியின் தி. நகர் முதல் கண்ணகி நகர் வரையிலான வழித்தட பஸ்சில் ஏறி மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டம் குறித்து பஸ்சில் பயணம் செய்த மகளிரிடையே நேரடியாக உரையாடி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் தினந்தோறும் இயக்கப்படும் பஸ்களில் மகளிருக்கு கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற ஒட்டுவில்லையும் ஒட்டப்பட்டுள்ளது.
அரசின் இத்திட்டத்தின் வாயிலாக ஆஸ்பத்திரிகள், வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள், மீன்வலை நிறுவனங்கள், செங்கல் சூளைகள், உழவர் சந்தை, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி புரிபவர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மிக குறைந்த வருமானம் தரும் பணிக்கு செல்லும் பெண்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தில் 25 முதல் 30 சதவீதம் வரை பயணச்செலவுக்கு செலவிட்டு வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 8-5-2021 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இதுநாள்வரை பூந்தமல்லி, திருத்தணி, திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை போன்ற 4 பணிமனைகளில் 24 லட்சத்து 59 ஆயிரத்து 876 பெண்களும், 3,676 மூன்றாம் பாலினத்தவர்களும், 19 ஆயிரத்து 689 மாற்றுத்திறனாளிகளும், மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 1004 என மொத்தம் 24 லட்சத்து 84 ஆயிரத்து 245 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story