அடையாறு கால்வாய் பகுதியில் அமைச்சர்கள், அதிகாரி ஆய்வு - தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு
அடையாறு கால்வாய் பகுதியில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், அதிகாரி அமுதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
வண்டலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள், நிரம்பி வழிகிறது. நிரம்பிய நந்திவரம் ஏரியில் இருந்து உபரி நீர் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் வழியாக ஆதனூர், ஊரப்பாக்கம் வழியாக செல்லும் அடையாறு ஆற்றில் சென்று கலக்கிறது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி எல்லையில் தொடங்கும் ஜீரோ பாயிண்ட் அடையாறு கால்வாய் பகுதியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஊரக வளர்ச்சிதுறை முதன்மைசெயலாளர் அமுதா ஆகியோர் மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், அடையாறு கால்வாய்களில் மழைநீர் மற்றும் ஏரிகளில் இருந்து வரும் உபரி நீர் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒழுங்கான முறையில் செல்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு இருந்த ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதனிடம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரி அமுதா ஆகியோர் மழை பாதிப்புகள் குறித்து கேட்டனர்.
பின்னர் அடையாறு கால்வாய்களை தொடர்ந்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். அப்போது அமைச்சர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், ஆதனூர் கரசங்கால் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழ்அமுதன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக அமைச்சர்கள் ஆய்வு செய்வதற்கு முன்பு காலை 7 மணி அளவில் ஆதனூர் ஜீரோ பாயிண்ட் அடையாறு கால்வாய் தொடங்கும் இடத்தில் ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா ஆய்வு செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆதனூர் ஊரப்பாக்கம், வரதராஜபுரம் உள்ளிட்ட அடையாறு கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. அதன்பிறகு அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஆதனூர் ஜீரோ பாயிண்ட் முதல் பள்ளிக்கரணை வரை அடையாறு கால்வாய்களில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பெரிய அளவில் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
முதல்-அமைச்சர் உத்தரவுபடி தற்போது ஆதனூரில் இருந்து பள்ளிக்கரணை வரை அடையாறு கால்வாய் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்கிறோம். ஆய்வுக்கு பின்னர் விவரங்கள் முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story