மழையால் அடிக்கடி பாதிப்பு ஏற்படும் 22 இடங்களில் சிறப்பு கண்காணிப்பு
மழையால் அடிக்கடி பாதிப்பு ஏற்படும் 22 இடங்களில் சிறப்பு கண்காணிப்பு
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வரும் 22 இடங்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுப்புறசூழல் முதன்மை செயலாளருமான சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரியில் வடகிழக்கு பருவமழை குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய தாலுகாக்களில் அதிகளவில் பெய்யும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள் விழும் வாய்ப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரங்கள், மணல் மூட்டைகைள தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்துக்கு பின்னர் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
70 சதவீதம் நிரம்பியது
நீலகிரி மாவட்டத்தில் 283 அபாயகரமான இடங்களில் 22 இடங்களில் அடிக்கடி மழையால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்கு தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது. அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. பேரிடர் சுகாதாரத்துறை மூலம் 13 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 23 நிலையான மருத்துவ குழு பயிற்சி அளித்து தயாராக உள்ளது. 42 மண்டல குழுவின் கீழ் 3 ஆயிரத்து 25 பேர் முதல்நிலை பொறுப்பாளர்களாக உள்ளனர்.
நீலகிரியில் 15 அணைகள் உள்ளது. தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, 70 சதவீதம் நிரம்பி உள்ளது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிரம்பும் பட்சத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திறக்கப்படும். நீலகிரியில் மழையால் பாதிப்பில்லை. தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புபடை வரவழைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் சச்சின், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story