பொருட்களின் தர நிர்ணய விழிப்புணர்வு பயிற்சி முகாம்
பொருட்களின் தர நிர்ணய விழிப்புணர்வு பயிற்சி முகாம்
கோத்தகிரி
கோத்தகிரியில் பொருட்களின் தர நிர்ணயங்கள் மற்றும் தர முத்திரை குறித்து பொதுமக்களுக்கான ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
விழிப்புணர்வு முகாம்
இந்திய தர நிர்ணய கோவை மண்டல அலுவலகம் மற்றும் கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு குழு ஆகியவற்றின் சார்பில் கோத்தகிரியில் உள்ள தனியார் அறக்கட்டளை அரங்கத்தில் பொருட்களின் தர நிர்ணயங்கள் மற்றும் தர முத்திரை குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு நுகர்வோர் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் வினோபா பாப் அனைவரையும் வரவேற்றார். மாநில நுகர்வோர் அமைப்பின் துணைத்தலைவர் ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் நந்தகுமார், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, வக்கீல் நஞ்சன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தர நிர்ணய கோவை மண்டல அலுவலக விஞ்ஞானி அருள் சத்யா கலந்து கொண்டு பேசுகையில், இந்திய அரசு தரமான பொருட்களுக்கு வழங்கும் முத்திரைகள் குறித்தும், பொருட்களின் தரத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விளக்கிப் பேசினார்.
தரமான பொருட்கள்
மேலும் மின்சாதன மற்றும் இதர நுகர் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ முத்திரையும், உலகத் தரம் மிக்க பொருட்களுக்கு ஐ.எஸ்.ஓ முத்திரையும், சுற்றுச்சூழல் பாதிக்காத பொருட்களுக்கு ஈகோ முத்திரை, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை, உணவு பொருட்களுக்கு அக்மார்க் முத்திரை, பட்டுத் துணிகளுக்கு சில்க் மார்க் முத்திரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கு எஸ்.பி.ஓ முத்திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
எனவே பொதுமக்கள் தரமான பொருட்களை கண்டறிய, அதில் உரிய முத்திரை உள்ளதா என சோதித்துப் பார்த்து வாங்கிப் பயனடைய வேண்டும் என்று தெரிவித்தார். நீலகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து பேசினார். முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story