முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்


முருகன் கோவில்களில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 10 Nov 2021 6:35 PM IST (Updated: 10 Nov 2021 6:35 PM IST)
t-max-icont-min-icon

கந்தசஷ்டியையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

கம்பம்:

கம்பம் சுருளிவேலப்பர்

கந்த சஷ்டியையொட்டி கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சண்முக சுப்பிரமணியசாமி சன்னதி, சுருளி வேலப்பர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி, கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதி, ஆதிசக்தி விநாயகர் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமி சன்னதி ஆகியவற்றில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடந்தது. 

கம்பம் சுருளி வேலப்பர் என்ற சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

 மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க காலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பிறகு அரசு விதிமுறைப்படி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்களுக்கு மஞ்சள், மஞ்சள் கயிறு, குங்குமம் அடங்கிய மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டன.

கூடல் சுந்தரவேலவர் கோவில்

கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் வள்ளி, தேவசேனாவுடன் கூடல் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. 

முன்னதாக கல்யாண சீர்கள், தாலி, மஞ்சள் கயிறு, மணமாலை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு மற்றும் மெட்டிகள் கொண்டு வரப்பட்டு வண்ண மலர்களால் வள்ளி, தேவசேனா, சுந்தர வேலவரை அலங்காரம் செய்தனர்.
அதன்பிறகு வள்ளி, தேவசேனாவுக்கு சுந்தரவேலவர் சார்பில் புரோகிதர்கள் திருமாங்கல்யத்தை அணிவித்தனர். 

அப்போது, பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். பின்னர் மாலையில் மயில்  வாகனத்தில் வள்ளி, தேவசேனாவுடன் சுந்தரவேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைந்தது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு கே.பி.கோபால் அருள்நெறி கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கூடல் சுந்தரவேலவர் கோவில் விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story