வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,569 கனஅடி தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3,569 கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 10 Nov 2021 6:41 PM IST (Updated: 10 Nov 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

முழு கொள்ளளவை எட்டியதால், வைகை அணையில் இருந்து 3,569 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆண்டிப்பட்டி:

 வைகை அணை 

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் 69 அடியை எட்டியது.
 
இதனையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பதை அறிவிக்கும் வகையில், அணையில் பொருத்தப்பட்டு இருந்த அபாய ஒலி 3 முறை ஒலிக்கப்பட்டது. 

  3,569 கனஅடி தண்ணீர்

இந்தநிலையில் நேற்று காலை வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,569 கனஅடியாக உயர்ந்தது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. 

இதேபோல் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்துக்காக கால்வாய் மூலம் 500 கன அடி தண்ணீர் ஏற்கனவே திறக்கப்பட்டு வருகிறது. மதுரை, சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வழக்கம்போல 69 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

பாசனம், குடிநீர், உபரிநீர் என அணையில் இருந்து மொத்தம் 3,569 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் 7  பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. 

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story