நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மகன் கண்முன் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மகன் கண்முன் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே நின்ற லாரி மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் மகன் கண்முன் தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாய்-மகன்
திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது46). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி பத்மாவதி (42). இவர்களது மகன் வைஷ்ணவ் (14). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் பத்மாவதி தனது மகன் வைஷ்ணவுடன் ஸ்கூட்டரில் காடையூரில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்தார். ஸ்கூட்டரை பத்மாவதி ஓட்டினார். பின் இருக்கையில் அவருடைய மகன் வைஷ்ணவ் அமர்ந்து இருந்தான்.
இவர்களுடைய ஸ்கூட்டர் திருப்பூர் -தாராபுரம் ரோடு குப்பிச்சிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையோரம் டாரஸ் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் சிமெண்டு மூட்டைகள் இருந்தன. அந்த சிமெண்டு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பத்மாவதிஓட்டி சென்ற ஸ்கூட்டர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
பலி
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் பத்மாவதி ஸ்கூட்டரில் அமர்ந்த நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பின்னால் அமர்ந்து வந்த அவரது மகன் வைஷ்ணவ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனே அருகில் இருந்தவர்கள் வினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து லேசான காயம் அடைந்த வைஷ்ணவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்மாவதியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண்முன்னே தாய் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story