ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் மங்காங்குளத்தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து தவஅமுதம் அன்னதான கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் கும்பாபிஷேக விழாவை கடந்த 8-ந்தேதி திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கோபூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 2-ம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 3-ம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றது.
திருக்கல்யாணம்
இதையடுத்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 5.30 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க 9.40 மணிக்கு ஊர்வலமாக கலசம் புறப்பட்டு சென்றது. பின்னர் 9.55 மணி அளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், மகா காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இரவில் திருக்கல்யாணமும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மங்காங்குளத்தெரு மக்கள் மற்றும் கோவில் நாட்டாமைகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story