விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர்


விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர்
x
தினத்தந்தி 10 Nov 2021 11:04 PM IST (Updated: 10 Nov 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு பணியில் ஈடுபட பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

விழுப்புரம், 

பேரிடர் மீட்பு குழுவினர்

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அது புயலாக மாறி  சென்னை அருகே இன்று (வியாழக்கிழமை) கரையை கடக்கும் என்பதால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்களுடன் மாநில அளவில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 57 போலீசாரும், சிறப்பு காவல் படையினர் 60 பேரும் அடங்கிய பேரிடர் மீட்புக்குழுவினரும் இணைந்து புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் 

இவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தலைமையிடமான போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2 குழுக்களும், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4 உட்கோட்டங்களில் தலா ஒரு குழுவும், கடலோர பகுதியான மரக்காணத்தில் தனியாக ஒரு சிறப்பு குழுவும் என 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Next Story