பழனி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. சண்முகர், வள்ளி-தெய்வானை மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பழனி:
கந்தசஷ்டி விழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியாக சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் மலைக்கோவிலில் நடைபெற்றது.
முன்னதாக காலை 8 மணிக்கு மலைக்கோவில் மகா மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. மணமேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது.
திருக்கல்யாணம்
இதைத்தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் ரிஷப லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவில் குருக்கள் திருமண மந்திரங்களை ஓத, பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யத்தை வள்ளி, தெய்வானைக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
முன்னதாக கந்தசஷ்டி திருவிழா குறித்தும், அதன் சிறப்பு குறித்தும் குருக்கள் விளக்கி கூறினர். பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதையடுத்து 16 வகை தீபாராதனை, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விழாவில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சன்னதியில் எழுந்தருளிய சண்முகருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் நாச்சிமுத்து மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருக்கல்யாண நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருக்கல்யாணம் முடிந்ததும் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது கோவில் வெளிப்பிரகாரத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளிய சண்முகர், வள்ளி-தெய்வாைனயை பக்தர்கள் தரிசித்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று இரவு 7 மணி அளவில் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 9 மணி அளவில் தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைந்தது.
Related Tags :
Next Story