பந்தல் அமைப்பாளர் கொலையில் 8 பேர் கைது
பந்தல் அமைப்பாளர் கொலையில் 8 பேர் கைது
திருப்புவனம்
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 53). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். சிவகங்கை மாவட்டம் டி.அதிகரை கிராமத்தில் கடந்த 7-ந் தேதி இரவு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் முருகனை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து முருகனின் மகன் விஜய் பூவந்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். இந்த வழக்கில் மகாபாரதி என்ற சப்பாணி(22), தமிழ்செல்வன் (25), மூவேந்திரன் என்ற கிடாமுட்டி (21), மாரிமுத்து (25), மதியழகன் (25), முத்துக்கருப்பன் (18), பிரபாகரன் (22) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் என 8 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் முருகன் குடும்பத்திற்கும், புளியங்குளத்தை சேர்ந்த பம்பை தவமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் பம்பை தவமணி மற்றும் சிலர் முருகன் வீட்டிற்கு வந்து தகராறு செய்யும்போது விஜய், முருகன், முருகனின் தம்பி பூமிநாதன் ஆகியோர் சேர்ந்து கடந்த ஆண்டு பம்பை தவமணியை தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து சிலைமான் போலீசில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு பம்பை தவமணியின் கூட்டாளிகள் டி.அதிகரை கிராமத்தில் பந்தல் போடும் போது முருகனை கொலை செய்துள்ளனர் எனவும் தெரியவருகிறது.
Related Tags :
Next Story