தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்


தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து கரும்பு, வாழைகளை நாசப்படுத்தின.

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரத்தில் தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து கரும்பு, வாழைகளை நாசப்படுத்தின. 

யானைகள் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் அனவன் குடியிருப்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மலைஅடிவாரத்தில் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் குட்டியுடன் கூட்டமாக வந்த காட்டு யானைகள் அப்பகுதியில் சண்முகம் என்பவரின் மகன்கள் சுடலைமணி, சுப்பிரமணியன் ஆகியோரது வயலில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, தென்னை மற்றும் வாழைகளை நாசப்படுத்திச் சென்றது. 

இழப்பீடு வழங்க வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக குட்டியுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து இப்பகுதியில் உள்ள கரும்புகளை தின்று, சாய்த்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வயலுக்குள் புகுந்து பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்வதற்காக பயிரிடப்பட்டிருந்த கரும்புகள், வாழைகளை சேதப்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமும் இதே வயலில் யானை கூட்டம் புகுந்தது.

இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். மேலும் ஏற்கனவே சேதமான கரும்புகளுக்கும், தற்போது சேதமாகியுள்ள கரும்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வனத்துறையினரும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story