கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கந்த சஷ்டியையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர்,
திருக்கல்யாண உற்சவம்
கந்தசஷ்டியையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பாக முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
அப்போது அங்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் முருகன், வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் எழுந்தருளினார். அப்போது சிறப்பு பூஜை செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.
சாமி தரிசனம்
பின்னர் இசை வாத்தியங்கள் முழங்க முருகப்பெருமான் தாலி கட்டி, வள்ளி-தெய்வானையை ஏற்று கொண்டார். அப்போது பக்தர்கள் அரோகரா... என கோஷம் எழுப்பி பூக்களை தூவினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கி வாழ்வில் சுபகாரியம் பிறக்கும் என்பது ஐதீகம். இதையடுத்து, முருகப்பெருமான் திருக்கல்யாணத்தில் கரூர், திருமாநிலையூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டியையொட்டி மூலவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
பின்னர் முருகனை தேரில் அமர வைத்து கோவிலை 3 முறை பக்தர்கள் வலம் வந்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story