புரோட்டா மாஸ்டர் உள்பட 2 பேர் தற்கொலை
பனவடலிசத்திரம் அருகே புரோட்டா மாஸ்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே புரோட்டா மாஸ்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
புரோட்டா மாஸ்டர்
பனவடலிசத்திரம் அருகே உள்ள மேலசிவகாமியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 40). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், செல்வம் என்ற மகனும், கோபி என்ற மகளும் உள்ளனர். இவர் அப்பகுதியில் உள்ள புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் செல்லத்துரை தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அய்யாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி
இதேபோல் பனவடலிசத்திரம் அருகே உசிலங்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45) விவசாயி. இவரது மனைவி 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். பாலகிருஷ்ணன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாலையில் சென்றபோது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தன்னை கவனிக்க ஆளில்லை என்பதால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் அய்யாபுரம் போலீசார் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story