தாயுடன் இளம்பெண் திடீர் தர்ணா
கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் தனது தாயுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் தனது தாயுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளம்பெண் தர்ணா
நெல்லை பாளையங்கோட்டை செந்தில்நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் இசக்கிசெல்வி (வயது 27).
பி.ஏ. பட்டதாரியான இவர் நேற்று காலை தனது தாயார் முழுமதியுடன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் திடீரென அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் என்னிடம் ஜெராக்ஸ் கடை வைக்க வேண்டும், எனவே உனது பெற்றோரிடம் ரூ.2 லட்சம் வாங்கி வா என்று கூறி என்னை துன்புறுத்தினார். மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டும் கொடுமைப் படுத்தினார். நான் முடியாது என்று கூறியதால் என்னை எனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். இதற்கு எனது மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து பலமுறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நடவடிக்கை
தற்போது எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் புகைப்படம் எடுத்து எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி, நீ கூடுதல் வரதட்சணை தரவில்லை என்றால் இந்த பெண்ணுடன் நான் வாழ போகிறேன் என்று மிரட்டுகிறார். எனவே, என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் தாயுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story