ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் இருளர் இன மக்கள்
ஊத்தங்கரை அருகே இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.
இருளர் இன மக்கள்
ஊத்தங்கரை ஒன்றியம் மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது தளபதி நகர். இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இருளர் இன மக்கள் குடி அமர்த்தப்பட்டனர். தற்போது அங்கு 350 குடும்பங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
இருளர் இன மக்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலே செய்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை
10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருந்து வரும் அவர்களுக்கு இதுவரை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி இல்லாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். மின் விளக்கு வசதி இல்லாததால் மழை காலங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் புகுந்து வருகின்றன.
குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரையே பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள மண் சாலை மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
மேலும் குழந்தைகள் கல்வி கற்பதற்காகவும், பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கும் 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சிறு சிறு பாதிப்புகளுக்கு கூட சிகிச்சைக்காக சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சிங்காரபேட்டைக்கோ அல்லது ஊத்தங்கரைக்கோ சென்று வருகிறார்கள்.
நடவடிக்கை
இதனிடையே கடந்த ஆண்டு தளபதி நகரை சேர்ந்த 105 குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பட்டா இல்லாத காரணத்தினால் வீடுகள் கட்டுவதில் தொய்வு ஏற்பட்டது. அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் பொதுமக்களுக்கு மின் விளக்கு, குடிநீர், சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story