‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 11 Nov 2021 12:47 PM IST (Updated: 11 Nov 2021 12:47 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

4 நாட்களாகியும் மழைநீர் வடியாத சோகம்



சென்னையில் பெய்த 23 செ.மீ. கனமழையால் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மாநகராட்சி, தீயணைப்பு, போலீஸ்துறை இணைந்து மின்மோட்டார்கள் மூலம் வெள்ளநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் பலனாக பல இடங்களில் வெள்ளநீர் வடிந்துவிட்டது. அதே நேரத்தில் புரசைவாக்கம் தானா தெரு, பெரம்பூர்-ஜமாலியா நெடுஞ்சாலை, வடபெரும்பாக்கம், மாதவரம் மண்டலம் திருமலை நகர் விரிவு 6-வது குறுக்கு தெரு, திரு.வி.க. தொகுதி கே.எம்.கார்டன் பகுதி, பழைய வண்ணாரப் பேட்டை பென்சினர்ஸ் 2 மற்றும் 3-வது தெருக்கள், சாலிகிராமம் ஸ்டேட் பேங்க் காலனி முதல் தெரு உள்பட இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுடன் நாட்களை கடக்கும் நிலை உள்ளது. மீண்டும் மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதற்குமுன் அதிகாரிகள் கள ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மழைநீர் வடியாமல் சிரமப்படும் மக்கள்.

மின் மயானத்தில் எந்திர கோளாறு

சென்னை வியாசர்பாடி பகுதியில் உயிரிழந்த சாந்தி என்ற பெண்ணின் உடலை தகனம் செய்வதற்காக பெரம்பூர் மின் மயானத்துக்கு கடந்த 9-ந்தேதி காலை 11.30 மணிக்கு எடுத்து சென்றோம். ஆனால் 2.50 மணிக்கு தான் தகனம் செய்ய முடிந்தது. இதற்கான காரணத்தை விசாரித்தபோது உடலை எரியூட்டும் மின் எந்திரம் அடிக்கடி பழுதடைவது தெரிய வந்தது. இறந்தவர்கள் உடலை காக்க வைப்பது வேதனையான விஷயம். எனவே பெரம்பூர் மின்மயானத்தில் உள்ள கோளாறுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

- ஆர்.சந்திர சேகர், சமூக சேகவர்.

அகற்றப்படாத குப்பைகள்

சென்னை கே.கே.நகர் 10-வது செக்டார் 63-வது தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. மழைக்காலத்தில் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றாவிட்டால் நோய் பரவும் ஆபத்து இருக்கிறது. எனவே இங்குள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். குப்பைகளை தேங்க விடாமல் தினமும் எடுத்து செல்ல வேண்டும்.

- சம்பத் சின்னசாமி, கே.கே.நகர்.

கொப்பளிக்கும் கழிவுநீர்


சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி கொப்பளிக்கிறது. இதனால் சாலை முழுவதும் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வழியாகத்தான் டாக்டர்கள், நோயாளிகள், பொதுமக்கள் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. எனவே கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கற்பகம், பாரிமுனை.

ஆபத்தான மின்இணைப்பு பெட்டி

சென்னை வியாசர்பாடி, திருவள்ளுவர் தெருவில் மின் இணைப்பு பெட்டியில் வயர்கள் வெளியே தெரியும் வகையில் இருக்கிறது. தெருக்களில் சிறுவர்கள் விளையாடுகிறார்கள். மழைக்காலம் என்பதால் மின்கசிவு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

-த.ஆறுமுகம், வியாசர்பாடி.

கழிவுநீர் கால்வாய் அடைப்பு

காஞ்சீபுரம் பெரியார் நகர் கோவிந்த ராஜன் தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைத்துள்ளது. இந்த அடைப்பை சரி செய்து தந்தால், மழை பெய்யும்போது தண்ணீர் தேங்காமல் வெளியேற வசதியாக இருக்கும். இல்லையென்றால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இன்னல்களை ஏற்படுத்திவிடும். விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

- பொதுமக்கள், காஞ்சீபுரம்.

மழைநீர் கால்வாய் மூடி சரி செய்யப்படுமா?


சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 4-வது தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி பல மாதங்களாக சீர்செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் சிலர் கீழே தடுமாறி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து யாரும் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மழைநீர் வடிகால்வாய் மீது துணியை வைத்து மறைத்து கற்களை வைத்து உள்ளோம். மழைக்காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆண்டியப்பன், திருவொற்றியூர்.

எரியாத தெருவிளக்குகள்

காஞ்சீபுரம் மாவட்டம் பூந்தமல்லி வரதராஜபுரம் ஊராட்சி ராஜீவ்காந்தி தெருவில் பல மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலை வசதியும் மோசமாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் இந்த தெருவில் அச்சத்துடனும், தயக்கத்துடனும் செல்ல வேண்டி உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் கவனிப்பார்களா?

கோதை ஜெயராமன், வரதராஜபுரம்.

சுகாதார சீர்கேடு


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வல்லம் ஊராட்சி நேரு நகர் காமராஜர் தெருவில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை குப்பை கொட்டும் இடம் போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த இடம் முழுவதும் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இப்பகுதி நோய்கள் பரப்பும் இடமாக மாறிவிடும்.

-நேரு நகர் பகுதி மக்கள்.

நாய்கள் தொல்லை தாங்க முடியல...

சென்னை மாடம்பாக்கம் திடீர் நகர் கம்பர் தெருவில் தெருநாய்கள் அதிகம் வசிக்கின்றன. தெருவில் நடந்து செல்வோர்களைவயும், வாகனத்தில் வருவோர்களையும் விரட்டுகின்றன. இதனால் குழந்தைகளை தெருவில் விளையாட அனுப்புவதற்கு பயமாக உள்ளது. பெரியவர்களும் அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலை உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், மாடம்பாக்கம்.

Next Story