கனமழை காரணமாக ஏ.என்.குப்பம் அணைக்கட்டு நிரம்பியது - நீர்வரத்து கால்வாய் திறப்பு
கும்மிடிப்பூண்டி அருகே கனமழை காரணமாக ஏ.என். குப்பம் அணைக்கட்டு நிரம்பி வருவதால் அதன் நீர் வரத்து கால்வாய் திறக்கப்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே ஏ.என்.குப்பம் அணைக்கட்டு உள்ளது. கனமழை காரணமாக இந்த அணைக்கட்டு நிரம்பிய நிலையில் தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 1850 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனையடுத்து அணைக்கட்டின் கீழ் உள்ள ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய் தற்போது திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கீழ்முதலம்பேடு, பண்பாக்கம், பரணம்பேடு, பெருவாயல், ஏனாதிமேல்பாக்கம், உள்பட 20 கிராமங்களில் உள்ள ஏரிகள் பயன் அடையும்.
மேலும், அணைக்கட்டு அருகே வசித்து வரும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ள நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் சென்றிட தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அணைக்கட்டின் அருகே 3 ஆயிரம் மணல்மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை கவரைப்பேட்டை பிரிவு உதவி பொறியாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.
இந்த அணைக்கட்டு மற்றும் ஆரணி ஆற்று கரையோர பகுதிகளை பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story