முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேற்றம்: மதுராந்தகம் ஏரியில் கலெக்டர் நேரில் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில், 250 முகாம்களில் 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவ மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.
இதன் காரணமாக உபரிநீர் ஏரியில் உள்ள 110 ஷெட்டர்கள் மூலமாக வெளியேற்றப்படுகின்றன. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஏரி அமைந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் ராகுல்நாத் நிருபர்களிடம் பேசும்போது, மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை தாண்டிய நிலையில், ஏரிக்கு வினாடிக்கு வரும் 2,300 கனஅடி நீரானது உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, உடை மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மதுராந்தகம் ஏரியில் 694 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. தடுப்பணைகள் பாதுகாப்பாகவும், ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 சதவீத ஏரிகள் நிரம்பி உள்ளதாக கூறிய அவர், வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் ஏரி மற்றும் குளங்களை பாதுகாத்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் 250 முகாம்களில் 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இதில் நீர்வள ஆதார கீழ் பாலாறு வடிகால் செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் நீல்முடியேன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், ஆர்.டி.ஒ. சரஸ்வதி, வட்டாட்சியர் நடராஜன், இளநிலை செயற்பொறியாளர் குமார், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மங்காதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவகுரு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story