திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் வெள்ளம்: நெரும்பூர்-இரும்புலிச்சேரி மண் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், நெரும்பூர்-இரும்புலிச்சேரி மண் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
கல்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ளது இரும்புலிச்சேரி கிராமம். இந்த கிராமம் மற்றும் இதனையடுத்து சின்ன எடையாத்தூர், பெரிய எடையாத்தூர் கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இரும்புலிச்சேரி கிராமத்தையொட்டி பாலாறு செல்கிறது. இந்த பாலாற்றின் குறுக்கே சுமார் 30 வருடங்களுக்கு முன் சிமெண்ட் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக இரும்புலிச்சேரி மற்றும் கிராம மக்கள் நெரும்பூர் வந்து கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு போன்ற வெளியிடங்களுக்குச் சென்று வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழையில் இந்த பாலம் சேதமடைந்தது. இதனால் கிராம மக்கள் போக்குவரத்துக்கு மாற்று வழியில் பல கி.மீ சுற்றி வந்து அவதிபட்டனர். இதையடுத்து இந்த பாலத்தின் அருகிலேயே மண் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
தற்போது சில தினங்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.
இந்த நிலையில் நெரும்பூர்-இரும்புலிச்சேரி மண் தரைப்பாலம் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரும்புலிச்சேரி மற்றும் கிராம மக்கள் வெளியிடங்களுக்கு மருத்துவம் உள்பட அவசிய தேவைகளுக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சேதமடைந்த தரைப்பாலத்தை நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார். அவரிடம் இரும்புலிச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் என்.பாஸ்கர் கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விரைவில் தற்காலிக பாலம் அமைக்கப்படும் என்று கலெக்டர் அவரிடம் உறுதி கூறினார். அப்போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் நிர்மலா, கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர் செந்தமிழ்ச்செல்வன் உள்பட அதிகாரிகள் வந்தனர்.
Related Tags :
Next Story