தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு
தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு
கோத்தகிரி
கோத்தகிரியில் மாறுபட்ட சீதோஷ்ணம் காரணமாக தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
மகசூல் குறையும்
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் சிறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையி்ல கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழையுடன் கூடிய மேகமூட்டமான சீதோஷ்ணநிலை நிலவுவதால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளை இந்த நோய் தாக்குவதால் சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் சிறு தேயிலை விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறும்போது:-
கவாத்து மூலம் அகற்ற வேண்டும்
கோத்தகிரியில் தற்போது மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. கொப்புளம் நோயைக் கட்டுப்படுத்த தேயிலைத் தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.
செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றவேண்டும். பின்னர் எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story