மந்திரி நவாப் மாலிக்கிற்கு மானநஷ்ட நோட்டீஸ்- அம்ருதா பட்னாவிஸ் அனுப்பினார்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 Nov 2021 7:08 PM IST (Updated: 11 Nov 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

மந்திரி நவாப் மாலிக் குடும்பத்தினர் தேவேந்திர பட்னாவிசுக்கு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பினார். பதிலடி கொடுக்கும் வகையில் மந்திரி நவாப் மாலிக்கிற்கு அம்ருதா பட்னாவிஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மும்பை, 

 மந்திரி நவாப் மாலிக் குடும்பத்தினர் தேவேந்திர பட்னாவிசுக்கு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பினார். பதிலடி கொடுக்கும் வகையில் மந்திரி நவாப் மாலிக்கிற்கு அம்ருதா பட்னாவிஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

 ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மந்திரியுமான நவாப் மாலிக் சமீபத்தில் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவர், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவியுடன் இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். மேலும் போதை பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபருக்கும், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவிக்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். 

இதையடுத்து மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளிகளிடம் இருந்து நவாப்மாலிக் குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, தேவேந்திர பட்னாவிஸ் அவரது ஆட்சியின் போது குற்றப்பின்னணி உடையவர்களை மந்திரி பதவிக்கு இணையான முக்கிய பதவிகளில் நியமித்ததாக நவாப்மாலிக் தெரிவித்து இருந்தார்.

 மானநஷ்ட நோட்டீஸ்

இந்தநிலையில் ரூ.5 கோடி கேட்டு நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான், தேவேந்திர பட்னாவிசுக்கு மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் எந்த ஆதாரமும் இல்லாமல் தேவேந்திர பட்னாவிஸ் சமீர் கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியதாக கூறப்பட்டுள்ளது. 
மேலும் அந்த நோட்டீசில், "சமீர்கான் போதை பொருள் வழக்கில் தவறாக போதை பொருள் தடுப்பு பிரிவால் சேர்க்கப்பட்டுள்ளார். நீங்கள் (தேவேந்திர பட்னாவிஸ்) கூறிய எந்த குற்றச்சாட்டுகளும் போதை பொருள் தடுப்பு பிரிவின் குற்றப்பத்திரிகையில் இல்லை. இதேபோல போதை பொருள் தடுப்பு பிரிவின் அறிக்கையில் சமீன்கானிடம் இருந்தோ அல்லது அவரது வீட்டில் இருந்தோ எந்த போதை பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என தெளிவாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் நீங்கள் சமீர்கான் மீது தவறான குற்றச்சாட்டை கூறினீர்கள்" என கூறப்பட்டுள்ளது. 

மேலும் தேவேந்திரபட்னாவிஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி சமீர்கான் மற்றும் அவரது குடும்பத்தினரை மனரீதியாக துன்புறுத்தியதற்காக ரூ.5 கோடி தரவேண்டும், எழுத்து பூர்மாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் சமீர்கானின் நோட்டீசை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறியுள்ளார்.

பட்னாவிஸ் மனைவி

இந்தநிலையில் தங்கள் மீது தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், டுவிட்டர் பதிவுகளை அழிக்க வேண்டும் என நவாப் மாலிக்கிற்கு தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
............


Next Story