மாநகராட்சி அலுவலகத்துக்கு அ.தி.மு.க.வினர் வியாபாரிகளுடன் வந்து முற்றுகை
ஏலத்தில் பங்கேற்க தடையில்லா சான்று வழங்காமல் அலைக்கழிப்பதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு அ.தி.மு.க.வினர் வியாபாரிகளுடன் வந்து முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்:
கடைகள் ஏலம்
திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலமிடப்படுகிறது. இந்த கடைகளை ஏலம் எடுக்க தடையில்லா சான்று கேட்டு வியாபாரிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்.
பின்னர் வருவாய் பிரிவு அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதில் அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வீரமார்பன், முன்னாள் கவுன்சிலர் சோனாசுருளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஏலத்தில் பங்கேற்க தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்கும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உரிய முறையில் மனு செய்தும் தடையில்லா சான்று வழங்கவில்லை என்று வியாபாாரிகள், அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.
வாக்குவாதம்
மேலும் ஏலத்தில் பங்கேற்க முன்வைப்பு தொகைக்கான வங்கி வரைவோலையை பெற்றுக் கொள்ளும்படி வலியுறுத்தினர். ஆனால் தடையில்லா சான்று இல்லாமல் வரைவோலையை பெற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஏலத்தில் பங்கேற்க மனு செய்யும் கடைசி நேரமான மாலை 4 மணி வரை வியாபாரிகள், அ.தி.மு.க.வினர் காத்திருந்தனர்.
எனினும் ஏல முன்வைப்பு தொகை வரைவோலையை அதிகாரிகள் வாங்கவில்லை. இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முன்னதாக அவர்கள் கூறுகையில், 40-க்கும் மேற்பட்டோர் ஏலத்தில் பங்கேற்பதை தடுக்கவே தடையில்லா சான்று தரவில்லை. இதன்மூலம் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும், என்றனர். இந்த முற்றுகையால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story