கழுத்தை நெரித்து தம்பதி கொலை பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தனர் தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு வலைவீச்சு
உத்தமபாளையம் அருகே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட தம்பதி பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி வண்ணார் தெருவில் வசித்து வந்தவர் கருப்பையா (வயது 80). இவரது மனைவி சிவகாமி (70). இவர்களுக்கு 6 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி கேரளாவில் வசித்து வருகின்றனர். கருப்பையாவும் அவரது மனைவியும் சலவை தொழில் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கருப்பையா வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது வீட்டில் ரத்தக்கறை படிந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கொலை
இதையடுத்து உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு கருப்பையாவும், சிவகாமியும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கருப்பையாவின் தலையில் காயம் இருந்தது. அவர்கள் இருவரின் கழுத்தும் நெரிக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்தநிலையில் கிடந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது மகன்களுக்கும், மகள்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு
இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்தார். தேனியில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார். மேலும் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டிலிருந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக அங்குள்ள சுடுகாடு வரை ஓடி சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொலை குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் 3 தனிப்படை அமைத்து அவர்கள் பல்வேறு கோணங்களில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நகை, பணம்
வீட்டில் உள்ள பீரோ திறக்கப்பட்டு கிடந்ததால் கணவன், மனைவி இருவரும் நகை மற்றும் பணத்துக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கருப்பையாவுக்கு நெருக்கமானவர்கள் துணையுடன் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கொலை நடந்த வீட்டில் எவ்வளவு பணம், நகைகள் இருந்தது என்று தெரியவில்லை. அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story