கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 16 பேர் பாதிப்பு


கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 16 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2021 10:26 PM IST (Updated: 11 Nov 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளும், சிதம்பரம், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வேப்பூர், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 10 படுக்கைகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 103 படுக்கைகளுடன் தனியாக டெங்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 59 பேரும், சிதம்பரத்தில் ஒருவரும், குறிஞ்சிப்பாடியில் 3 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

16 பேர் பாதிப்பு

இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், ராமாபுரம், திருவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 பேர், தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அங்கு அவர்களுக்கு டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 12 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் பகுதியை சேர்ந்த 4 பேர், சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் நகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுவரை நகரில் எவ்வித தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story