காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு-மக்களிடம் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்
பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் காவிரி கரையோர மக்களிடம் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.
நாமக்கல்:
உபரிநீர் வெளியேற்றம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில், 119 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இருந்தபோதும், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது.
இந்தநிலையில் பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நேற்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.
அறிவுறுத்தல்
அப்போது அவர் வெள்ள பாதிப்பின் போது பொதுமக்கள் தங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததுடன், பாதுகாப்பாக இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேட்டூர் அணை நிரம்பும் சமயத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் அதிகப்படியான தண்ணீரால் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர் ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையை எதிர்கொள்ள ரேஷன் கடைகளில் போதிய உணவு பொருட்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. காவிரி கரையோரத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் வீடுகள் வழங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு, தாசில்தார் சிவக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, பள்ளிபாளையம் வருவாய் அலுவலர் கார்த்திகா உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story