ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள்
திருப்பூர்-பல்லடம் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
திருப்பூர்-பல்லடம் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைக்காரர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலையோர கடைக்காரர்கள் கடைகளுக்கு முன்பு தற்காலிக பந்தல், விளம்பர பலகை, வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாநகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தீபாவளி பண்டிகைக்கு முன்பே திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அருள்புரம் வரை பல்லடம் ரோட்டில் இருபுறமும் உள்ள கடைக்காரர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்தனர்.
தீபாவளி பண்டிகை காலம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக தீபாவளி பண்டிகையையொட்டி மாநகர் முழுவதும் பிரதான சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. போக்குவரத்து ஸ்தம்பித்து போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
முற்றுகை
இந்தநிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கோட்ட பொறியாளர் மேற்பார்வையில் அதிகாரிகள் பல்லடம் ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலமாக கடைகளுக்கு முன்பு தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். விளம்பர பலகைகள், தற்காலிக பந்தல்கள், கூடாரம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
அப்போது கடைக்காரர்கள் சிலர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும். தேவையில்லாமல் கடைகளுக்கு முன்பு உள்ளவற்றை சேதப்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அங்கு வந்து பேசி, தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
தொடர் கண்காணிப்பு
ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை அறிந்ததும், பல கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பு வைத்திருந்த விளம்பர பலகை, தற்காலிக பந்தல் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அவசர, அவசரமாக அகற்றினார்கள். அருள்புரம் வரை பல்லடம் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, “மாநகரில் பிரதான சாலைகளில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல்கட்டமாக பல்லடம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மற்ற சாலைகளில் அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும். ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகும் அந்தந்த சாலைகளை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள்” என்றனர்.
Related Tags :
Next Story