மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமி மீட்பு
தேவகோட்டை அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமி மீட்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுமி மீட்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
தவறி விழுந்த சிறுமி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 50). இவருடைய மகள்கள் பேபி(வயது 14), ஹரிணி(9). இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது சிறுமி ஹரிணி காட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் திடீெரன்று தடுமாறி விழுந்தாள். அக்கா காப்பாற்று என கூக்குரலிட்டாள். சத்தம் கேட்டு பேபி அங்கு ஓடி வந்தாள். அதற்குள் ஹரிணி மண்ணுக்குள் புதைய தொடங்கினாள். சிறுமி உடல் முழுவதும் உள்ளே சென்று அவளது தலை மட்டும் வெளியே தெரிந்தது.
மூடப்படாத ஆழ்குழாய் கிணறு
இதனால் பதறி போன பேபி, தனது தங்கை ஹரிணி தலைமுடியை பிடித்து மேலே தூக்கினாள். பேபியும் அலறியபடிேய தங்கையை காப்பாற்ற முயன்றாள். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களும் வந்து அந்த சிறுமியை வெளியே தூக்கினர். அப்போது தான் சிறுமி உள்ளே விழுந்தது மூடப்படாத ஆழ்குழாய் கிணறு என தெரிய வந்தது.
காட்டுப்பகுதியில் போடப்பட்ட தண்ணீர் இல்லாத ஆழ்குழாய் கிணற்றை ஒப்பந்ததாரர்கள் குழாயை எடுத்து விட்டு மண்ணை மூடி விட்டு சென்று இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அந்த பயன்படுத்தப்படாத ஆழ்குழாய் கிணறு பகுதி பள்ளமாக மாறி உள்ளது. இது தெரியாமல் ஆடு மேய்த்த அந்த சிறுமி தவறி உள்ளே விழுந்து இருக்கிறாள்.
இந்த நிலையில் பயன்படுத்தாத ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த சிறுமியை அரவணைத்தனர்.
விசாரணை நடத்த உத்தரவு
இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் அந்தோணிராஜ், மற்றும் மருத்துவ குழுவினருடன் அங்கு விரைந்து சென்றனர்.அந்த மாணவியை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து நலமுடன் இருப்பதாக அறிவித்தனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் அந்த ஆழ் குழாய் கிணற்றை உடனடியாக மூடும்படியும் இதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story