தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் அய்யனார் மற்றும் செங்காமுனியார் கோவிலுக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து முறிந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்குபதில் புதிய மின்கம்பத்தை அமைத்து அதன் வழியாக மின் இணைப்பு கொடுத்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், மருவத்தூர், பெரம்பலூர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம், அரண்மணைக்குறிச்சி ராஜீவ் நகரில் முறையான வடிகால் வசதி இன்றி தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுத்தனர். எனவே செய்தி வெளியிட்ட புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், ராஜீவ்நகர், அரியலூர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூடலூரில் சுமார் 1,500 குடும்பத்தினரும், அருகில் உள்ள இலுப்பைக்குடியில் 500 குடும்பத்தினரும், கூத்தூரில் 1,500 குடும்பத்தினரும், பிலிமிசையில் 1,000 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் வங்கி அமைக்கப்பட்டால் நகைகளை அடகு வைத்து கடன் பெறவும், விவசாய கடன் பெறவும் உதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜன், கூடலூர், பெரம்பலூர்.
10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு தேவை
திருச்சி விமான நிலையம் குளாப்பட்டி பகுதியில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பத்து ரூபாய் நாணயம் வைத்துள்ளவர்கள் மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
செல்வம், குளாப்பட்டி, திருச்சி.
கழிவறை இல்லாததால் சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, நங்கவரம் பேரூராட்சி தெற்கு மற்றும் வடக்கு மாடுவிழுந்தான் பாறை பகுதியில் மக்கள் சாலையோரங்களில் மலம் கழிப்பதால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனத்தில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை தடுக்க அப்பகுதியில் பொதுக்கழிவறை அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடக்கு மாடுவிழுந்தான்பாறை, கரூர்.
இருக்கைகள் இன்றி காணப்படும் பயணிகள் நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள காசிம்புதுப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கை இல்லாததால் பஸ் ஏற வரும் பயணிகள் கால்கடுக்க நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காசிம்புதுப்பேட்டை, புதுக்கோட்டை.
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வாரச்சந்தை எதிரில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அன்னவாசல், புதுக்கோட்டை.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளாம்பாடி ஓன்றியத்துக்கு உட்பட்ட புதூர்பாளையம் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புதூர்பாளையம், திருச்சி.
பாதாள சாக்கடையில் அடைப்பு
திருச்சி சீனிவாசன் நகர் 6-வது பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர்வாய்க்கால் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சீனிவாசன் நகர், திருச்சி.
மேம்பாலத்தில் பள்ளம்
திருச்சி பீமநகர் மேம்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஷாம், பீமநகர், திருச்சி.
கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்
திருச்சி பொன்னகர் அருகில் உள்ள காமராஜபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆங்காங்கே தெருக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து தண்ணீர் பிடிக்கும்போது நுறையுடன் கருப்பு நிறத்தில் தண்ணீர் வருகிறது. இந்த நீர் துர்நாற்றம் வீசுவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கார்த்திகேயன், காமராஜபுரம், திருச்சி.
பழுதடைந்த மின்கம்பம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மணமேடு 1-வது வார்டு மாந்தோப்பு தெருவில் அமைக்கப்பட்டுள்ள 2-வது மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்து கம்பிகள் தெரிகின்றன. தற்போது மழைகாலம் என்பதால் மின்சார வினியோகம் இருக்கும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்துசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மணமேடு, திருச்சி.
தெருவிளக்கு வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், கீழ வாளாடி அம்பாள் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில் விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீழவாளாடி, திருச்சி.
Related Tags :
Next Story