கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 12 Nov 2021 2:22 AM IST (Updated: 12 Nov 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

திருச்சி
திருச்சி கோரையாற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் குடமுருட்டி ஆற்றில் சென்று காவிரியில் கலக்கிறது. எனவே, கோரையாற்று வெள்ளம் வடிய ஏதுவாக முக்கொம்பு மேலணையில் இருந்து கல்லணை நோக்கி செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் முக்கொம்பு மேலணையில் இருந்து பிரியும் கொள்ளிடம் ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மற்றும் பவானிசாகர் அணை, அமராவதி அணை ஆகியவற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரும் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு முக்கொம்பு மேலணைக்கு வந்தது. அதாவது, வினாடிக்கு 22,453 கன அடியாக வந்த தண்ணீர் அப்படியே கொள்ளிடம் ஆற்றில் உபரியாக திறந்து விடப்பட்டது.
கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு
பின்னர் படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரித்து, அன்று இரவு 10 மணியளவில் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அன்று நள்ளிரவு 38,930 கன அடியாக அதிகரித்தது.
நேற்று காலை அத்தண்ணீரின் அளவு படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 36,354 ஆக குறைந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே கரையோரம் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 35,210 கன அடியாக குறைந்தது.
இனி தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்திலும், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை (ஆற்றுப்பாசனம்) அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story