மாணவ, மாணவிகள்- பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
பள்ளி முன்பு மாணவ, மாணவிகள்- பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் குடிகாடு கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கு என கழிப்பறை வசதி இல்லை, மேலும் பள்ளியை சுற்றி சுற்றுச்சுவரும் அமைக்கப்படவில்லை, இதனால் இப்பகுதியில் சமூகவிரோதிகள் மது அருந்திவிட்டும், போதை வஸ்துகளை உபயோகப்படுத்தி விட்டும் பள்ளிக்கு அருகே மதுபாட்டில்களை உடைத்து செல்கின்றனர். மேலும் பள்ளிக்கு எதிரே சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், அப்பகுதி இளைஞர்கள் ஆகியோர் பள்ளிக்கு கழிப்பறை கட்ட வேண்டும், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியையும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பள்ளி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இது சம்பந்தமாக பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story