அரசு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி


அரசு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி
x
தினத்தந்தி 12 Nov 2021 2:31 AM IST (Updated: 12 Nov 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:

அரசு மருத்துவ கல்லூரி
அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க அப்போதைய தமிழக அரசு உத்தரவிட்டதோடு, மத்திய-மாநில அரசுகள் சார்பில் ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக அரியலுர் அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள காலி இடத்தில் 26 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி அரியலூரில் ரூ.347 கோடியில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது மருத்துவக்கல்லூரியின் கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதில் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், அலுவலகக் கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 150 மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயிலுவதற்கும் வசதி செய்யப்பட்டு வந்தது.
மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ மதிப்பீடு மற்றும் மதிப்பீடு வாரியம் வழங்கியுள்ளது. இதனால் அரியலூர் மாவட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story