தக்காளி விலை கிடு, கிடு உயர்வு
தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது.
பெரம்பலூர்:
இல்லத்தரசிகளின் சமையலறையில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது. மேலும் வட மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல்- டீசல் விலையை போல், தக்காளி விலை தினமும் கிடு, கிடுவென உயா்ந்து வருகிறது. பெரம்பலூரில் கடந்த வாரம் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது 4 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையாகிறது.
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையாகிறது. இன்னும் சில நாட்களில் 100-ஐ தொட்டுவிடும் நிலையில் உள்ளதால், இல்லத்தரசிகள் கவலையடைந்ததோடு, பெரும்பாலானோர் சமையலில் தக்காளியை தவிர்த்து வருகின்றனர். பெரம்பலூரில் பல ஓட்டல்களில் காலை, இரவு டிபன்களுக்கு தக்காளி சட்டினி வழங்கப்படும். தற்போது விலை உயர்வால் பெரும்பாலான ஓட்டல்களில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு, கொத்தமல்லி, புதினா சட்னி வழங்கப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் சரக்கு வாகனங்களில் மொத்தமாக குவித்து வைத்து விற்பனை செய்யப்படும் தக்காளி கடந்த வாரம் 5 கிலோ ரூ.100-க்கு கூவி, கூவி விற்ற நிலையில், இந்த வாரம் 2½ கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story