குமரியில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழைக்கு மேலும் 4 வீடுகள் இடிந்தன.
நாகர்கோவில்,
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழைக்கு மேலும் 4 வீடுகள் இடிந்தன.
கனமழை
வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மாண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதே போல குமரி மாவட்டத்திலும் மழை நீடித்து பெய்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரம் பெய்வதும், சிறிது நேரம் மழை ஓய்வதும் என மாறி மாறி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பல மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு சென்றிருந்தனர். பின்னர் தகவல் தெரிந்ததும் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
மழை அளவு
குமாி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1 அணை பகுதியில் 71.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதே போல பூதப்பாண்டி-10.2, களியல்-43.4, கன்னிமார்-21.8, கொட்டாரம்- 3.2, குழித்துறை-39.8, மயிலாடி-6.2, நாகர்கோவில்-24, புத்தன்அணை-27.8, சுருளகோடு-21, தக்கலை-60, குளச்சல்-12.8, இரணியல்-16, பாலமோர்-25.4, ஆரல்வாய்மொழி-7, கோழிப்போர்விளை-55, அடையாமடை-58, குருந்தன்கோடு-38, முள்ளங்கினாவிளை-44.2, ஆனைகிடங்கு-29.4 என்ற மி.மீட்டர் அளவில் மழை பெய்திருந்தது. மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-57.8, பெருஞ்சாணி-29, சிற்றார் 2-70, மாம்பழத்துறையாறு-25 மற்றும் முக்கடல்-7 மி.மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகள் நிலவரம்
தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,378 கனஅடி தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 721 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 878 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 321 கனஅடியும், பொய்கை அணைக்கு வினாடிக்கு 25 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 234 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1,292 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து வினாடிக்கு 804 கனஅடியும், சிற்றார் 2 அணையில் இருந்து வினாடிக்கு 224 கனஅடியும், பொய்கை அணையில் இருந்து வினாடிக்கு 15 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வினாடிக்கு 34 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் அதிக அளவில் வெள்ளம் கொட்டுகிறது.
வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 35 வீடுகள் மழையால் இடிந்துள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 வீடுகள் மழைக்கு இடிந்தன. அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 2 வீடுகள் பகுதி அளவும், கல்குளம் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், திருவட்டார் தாலுகாவில் ஒரு வீடு பகுதி அளவும் இடிந்து சேதமடைந்தன.
நாகர்கோவில் மாநகரில் ஏற்கனவே சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சாலைகள் மேலும் சேதம் அடைந்துள்ளன. மழைநீர் பெருகி சாலைகள் அனைத்தும் குளம் போல காட்சி அளிக்கின்றன. அதோடு சேறும், சகதியும் நிறைந்து வயல்வெளி போல் சாலைகள் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சவேரியார் ஆலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்பட்டதால் நேற்று முன்தினம் இரவு சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்தது.
Related Tags :
Next Story