இடைத்தேர்தல் தோல்வி, பிட்காயின் முறைகேடு விவகாரம்: பசவராஜ் பொம்மை மீது பா.ஜனதா மேலிடம் கடும் அதிருப்தி
இடைத்தேர்தல் தோல்வி மற்றும் பிட்காயின் முறைகேடு விவகாரம் போன்றவற்றால் பசவராஜ் பொம்மை மீது பா.ஜனதா மேலிடம் கடும் அதிருப்தி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
கவலைப்பட வேண்டாம்
கர்நாடகத்தில் பிட்காயின் முறைகேடு குறித்து மாநில அரசு அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. அதை அரசு பகிரங்கப்படுத்தவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு அது பகிரங்கமானது. அதனால் இந்த பிட்காயின் முறைகேட்டில் பா.ஜனதா தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது பா.ஜனதா தலைவர்களுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இது அந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று அக்கட்சி தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்த பசவராஜ் பொம்மை, பிட்காயின் விவகாரம் குறித்து எடுத்துக் கூறினார். அதுபற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவர் கூறியதாக பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
திருப்தி அடையவில்லை
பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்பு நேற்று முன்தினம் இரவு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார். ஆனாலும் இதில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது.
பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை குறித்த தகவலை தொடக்கத்திலேயே வெளியிடாதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சினையாக எடுத்து கொண்டு குற்றம்சாட்டுவதால் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அவர்கள் முதல்-மந்திரி மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், அப்போது அவர் மவுனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இக்கட்டான சூழ்நிலை
உங்களின் தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் அரசுக்கு அவப்பெயர் வந்தால் என்ன செய்வது என்று அவர்கள் கேள்வி எழுப்புயதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் இடைத்தேர்தலில் சொந்த மாவட்டத்தில் பா.ஜனதா தோல்வி அடைந்தது, பிட்காயின் முறைகேடு விவகாரம் பசவராஜ் பொம்மைக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story