ரூ 8 லட்சம் செல்போன்கள் கண்டுபிடிப்பு
ரூ 8 லட்சம் செல்போன்கள் கண்டுபிடிப்பு
ஊட்டி
நீலகிரியில் தொலைந்துபோன ரூ.8 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
செல்போன்கள் கண்டுபிடிப்பு
நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் பண மோசடி, ஆன்லைன் மூலம் ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் புகார்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் தங்களது செல்போன்களை தவறவிட்டு இதுவரை புகார் கொடுக்காதவர்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஐஎம்இஐ எண்ணுடன் புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் புகார்கள் பெறப்பட்டு, செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொலைந்துபோன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் ஆகியோர் கண்டுபிடித்த செல்போன்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் கூறியதாவது:- பணம் செலுத்துவதாக கூறி மோசடி செய்வது, மற்றவர்களை நம்பவைத்து பணம் அனுப்ப வைப்பது போன்ற மோசடிகள் நடந்து வருகிறது.
ரூ.8 லட்சம் முடக்கம்
இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் ஈடுபடுகிறவர்கள் போலியான ஆவணங்களை கொண்டு செயல்படுவதால், அவர்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. கடந்த 5 மாதங்களில் தொலைந்துபோன அல்லது தவறவிட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த செல்போன்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. சைபர் குற்ற வழக்குகளில் இதுவரை ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் புகார்கள் அடிப்படையில் ரூ.8 லட்சம் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டது.
ஏமாந்து போனவர்கள் 155260 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால் பணம் தானாகவே வங்கிகளில் முடக்கப்பட்டு விடும். இந்த பணம் நீதிமன்ற உத்தரவு பெற்று மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பங்கள் அதிகரிக்க குற்றவாளிகளும் அதிகரித்து வருகின்றனர். கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஊட்டி ஆகிய நகரப்பகுதிகளில் புகார்கள் அதிகமாக வருகிறது. பெரும்பாலும் படித்தவர்கள் ஏமாந்து போகின்றனர். இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story