தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 புதிய விளையாட்டுகள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 புதிய விளையாட்டுகள் குறித்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால், பள்ளிக்கூடங்கள் தற்போது திறக்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூடுதலாக 5 விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி வில்வித்தை, கராத்தே, கிக் பாக்சிங், ரோல் பால், வழுக்குமரம் ஏறுதல் (மால்கம்) ஆகிய போட்டிகள் பள்ளி விளையாட்டுக்களில் சேர்க்கப்பட்டு உள்ளன.
இதைத் தொடர்ந்து இந்த விளையாட்டுக்களின் விதிமுறைகள் குறித்தும், அதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்தும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி வரவேற்று பேசினார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட விளையாட்டு கழகத்தை சேர்ந்தவர்கள், வல்லுநர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து 120 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக நடக்கிறது.
Related Tags :
Next Story