வேடசந்தூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்தது பயணிகள் உயிர் தப்பினர்


வேடசந்தூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்தது  பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 12 Nov 2021 7:47 PM IST (Updated: 12 Nov 2021 7:47 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேடசந்தூர்:
மதுரையில் இருந்து ஈரோடுக்கு ஒரு அரசு பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை திருப்பூரை சேர்ந்த டிரைவர் ஜெகதீஸ் (43) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கனகராஜ் உடன் வந்தார். வழியில் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி பிரிவில் நேற்று காலை பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ, திடீரென்று நடுரோட்டில் திரும்பியது. இந்தநிலையில் சரக்கு ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக பின்னால் வந்த அரசு பஸ்சை டிரைவர் ஜெகதீஸ் திருப்பினார். இதில் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபக்கம் சென்று பள்ளத்தில் கவிழ்ந்தது. எனினும் இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினார்கள். 
விபத்து நடந்தபோது எதிரே வேறு எந்த வாகனங்களும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ்சில் வந்த பயணிகள் அந்த வழியாக வந்த மற்ற அரசு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story