பழனியில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல்
பழனியில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் செய்தனர்.
பழனி:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பழனி குளத்துரோடு ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் முகமதுஅலி தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் சச்சிதானந்தம், மாவட்ட தலைவர் செல்வராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி அருகே தும்பலப்பட்டியில் உள்ள உபரிநிலங்களை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினர் மற்றும் தும்பலப்பட்டி விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர்கள் குளத்து ரவுண்டானாவில் இருந்து பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென புதுதாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை தொடர்பான மனுவை அளித்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சப்-கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story