தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்
திண்டுக்கல் மாநகராட்சி 16-வது வார்டில் உள்ள அபிராமிகுப்பத்தில் இருந்து ரங்கநாயகிநகருக்கு செல்லும் சாலையோரத்தில் இருந்த மரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து சாலையின் குறுக்காக விழுந்தது. தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மரத்தின் கிளையை மட்டும் வெட்டி அகற்றிவிட்டு மரத்தை அப்புறப்படுத்தாமல் சென்றுவிட்டனர். இதனால் இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் 24-வது வார்டு மார்க்கையன்கோட்டை ரோட்டில் உள்ள லட்சுமிநகரில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், சின்னமனூர்.
மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுமா?
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் இருந்து சுருளி அருவிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் புளியமரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் கீழே சாய்ந்த நிலையில் இருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது அந்த கிளைகள் படுவதுடன் அதில் பயணிப்பவர்களுக்கும் காயங்கள் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள புளியமர கிளைகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
குப்பைகளால் துர்நாற்றம்
திண்டுக்கல்லில், திருச்சி சாலையில் பாண்டியன்நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் பரவி கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, திண்டுக்கல்.
Related Tags :
Next Story