3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை


3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 12 Nov 2021 9:37 PM IST (Updated: 12 Nov 2021 9:37 PM IST)
t-max-icont-min-icon

3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர், நவ.13-
திருப்பூரில் பிரிண்டிங் பட்டறை உரிமையாளரை கொன்று பணத்தை கொள்ளையடித்த 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
 கொலை
திருப்பூர் கருவம்பாளையம் ஆலாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜோ நோபிள் (வயது 35). இவர் அப்பகுதியில் பனியன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். பிரிண்டிங் பட்டறை வளாகத்திலேயே அவர் குடியிருந்து வந்தார். இவருடைய பட்டறையில் சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (23), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யோகேஷ் (23), சாஸ்திரி பவனை சேர்ந்த ஸ்டீபன் (23) ஆகியோர் வேலை செய்து வந்தார்கள். அவர்கள் 3 பேரும் அந்த பிரிண்டிங் பட்டறை வளாகத்திலேயே தங்கியிருந்து பணியாற்றினார்கள். கருவம்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வி (45) என்பவரும் அந்த பட்டறையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 6-5-2018 அன்று இரவு ஜோ நோபிள், சதீஷ், யோகேஷ், ஸ்டீபன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் பிரிண்டிங் பட்டறையில் பணியாற்றினார்கள். பின்னர் பிரிண்டிங் பட்டறையின் அலுவலக அறையில் தமிழ்செல்வியும், மற்ற 4 பேரும் வேறு ஒரு அறையிலும் தூங்கினார்கள். அதிகாலை 2 மணி அளவில் சதீஷ், யோகேஷ், ஸ்டீபன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரிண்டிங் பட்டறையின் அலுவலக அறை மேஜை டிராயரில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். 3 பேரும் சேர்ந்து ஜோ நோபிளை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். மேலும் சுத்தியலால் தலையில் தாக்கினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் ஜோ நோபிள் மயங்கினார்.
பணம் கொள்ளை
அதன்பிறகு அலுவலக அறைக்குள் சென்று தமிழ்செல்வியை கொலை செய்து விடுவதாக மிரட்டி, மேஜை டிராயரில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பினார்கள். பின்னர் தமிழ்செல்வி சத்தம் போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தனர். படுகாயத்துடன் கிடந்த ஜோ நோபிளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சதீஷ், யோகேஷ், ஸ்டீபன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணம் நடராஜ் நேற்று தீர்ப்பு கூறினார். 
ஆயுள் தண்டனை
அந்த தீர்ப்பில் ஜோ நோபிளை கொலை செய்ததற்காக சதீஷ், யோகேஷ், ஸ்டீபன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், பணத்தை கொள்ளையடித்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், இதை ஏக காலத்தில் அனுபவிக்கவும், 3 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் முந்தைய அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

Next Story